மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக பீகாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!

பீகார் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய குடும்பம் தனது ஊழியரின் இறுதி சடங்கை இந்து முறைப்படி செய்து, அவரின் உடலை தோளில் சுமந்து இறுதி சடங்கு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக பீகாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இரு பிரிவினரிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். அது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையிலும், இந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதற்கும்  உதாரணமாக பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பீகார் தலைநகர் பாட்னாவில், முகமது ரிஸ்வான் என்பவருக்கு சொந்தமான கடையில், ராம்தேவ் ஷா என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அதனால் ராம்தேவ் ஷா, ரிஸ்வான் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதப்பட்டார். ராம்தேவிற்கு 75 வயது ஆனாலும் தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். வயது மூப்பு காரணமாக ராம்தேவ் கடந்த வாரம்  உயிரிழந்தார்.  அதனால், அவரது உடலை இந்து முறைப்படியே அடக்கம் செய்ய ரிஸ்வான் குடும்பம் முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்து மத முறைப்படி, சடங்குகள் செய்யப்பட்டு ராம்தேவின் உடலை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தார் ரிஸ்வான். அந்த ஊர்வலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 

அவர் எனது அப்பா போன்றவர் என்றும் வேலை தேடி அவர், தன் கடைக்கு வந்தபோது 50 வயது இருக்கும். உங்களால் அதிக எடையை தூக்க முடியாது என கூறினேன். அதற்கு அவர், என்னால் கணக்கு பார்க்க முடியும் என்று கூறி பணிக்கு சேர்ந்ததாகவும், வயது அதிகம் ஆனதால் ஓய்வெடுக்கும்படியும், சம்பளம் தருவதாகவும் கூறினேன். ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து கடையில் வேலை செய்தார்." என ரிஸ்வான் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.