பறவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்! வைரலாகும் புகைப்படம்!!

பறவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்! வைரலாகும் புகைப்படம்!!

பொதுவா நாம்மெல்லாம யாராவது தொலைந்து போனால் தான் அவர்களுக்காக போஸ்டர்கள் ஒட்டுவோம்...ஆனால் மதுரையில் ஒருவர் தான் வளர்த்த செல்லப் பறவை ஒன்று காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும்  போஸ்டர் ஒட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

மதுரையில் பொதுவாகவே அரசியல், சினிமா, சுப/துக்க நிகழ்வுகள் சார்ந்து மட்டுமில்லாது செல்லப்பிராணிகள்  காணாமல் போனால் அதற்கான அறிவிப்புகளையும் போஸ்டராக ஒட்டும் வழக்கம் உண்டு. அந்த வகையில் தான் தற்போது மதுரை பெரியார் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தான் செல்லமாக வளர்த்து வந்த பறவை ஒன்று காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில், ”செல்ல பறவை காணவில்லை..! கிளியைப்போன்ற உடல் அமைப்பு, பச்சை நிற உடல், சிவப்பு நிற வயிறு, கருப்பு நிற மூக்கு, அரக்கு நிற வால் போன்ற அங்கு அடையாளம் கொண்ட பறவையைப்பார்த்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும். கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ள அவர், பறவை தொலைந்து போன இடத்தையும், அவரது தொடர்பு விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பறவையின் உரிமையாளர் கூறும் போது, "ஒன்றரை வருடங்களாக ஜோடியாக வளர்த்து வரப்பட்ட நிலையில், பெண் பறவை மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து பறந்து சென்று விட்டதாகவும், அதனால் அதன் ஜோடியான ஆண் பறவை கவலையில் உணவு உண்ணாமல் தவித்து வருவதாகவும், பறவை எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் எனும் எதிர்பார்ப்பில் வாசல் கதவை கூட அடைக்காமலேயே வைத்திருப்பதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். தனது செல்லப்பறவை காணாமல் போன துக்கத்தில் உரிமையாளர் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.