திமுக பொதுக்கூட்டம், பக்திகூட்டம் ஆன கதை!

திமுக பொதுக்கூட்டம், பக்திகூட்டம் ஆன கதை!

காரைக்குடியில் திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில் பக்தி பாடலுக்கு, மகளிர் தொண்டர்கள் சாமியாட்டம் ஆடியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

திமுக மகளிரணி பெண்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். ஒரு புறம் பரபரப்பாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, மற்றொரு புறம் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பொதுக் கூட்டத்திற்கு வரும் வரை, வந்தவர்கள் எழுந்து செல்லாமல் இருக்க, திமுக  மகளிர் அணி சார்பில் பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு, கலகலப்பாக நடந்துகொண்டிருந்துள்ளது.

அப்போது, பொதுக்கூட்டத்தை பக்தியோடு ஆரம்பிக்க விரும்பியதால், கருப்புச்சாமி பக்திபாடல் பாடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கூட்டத்தில் இருந்த மகளிர் தொண்டர்களில் சிலர் அருள் வந்து சாமி ஆட தொடங்கிவிட்டனர். இதை சற்றும் எதிர்பாராத மற்ற தொண்டர்கள், சாமி ஆடும் தொண்டர்களை தாங்கிப்பிடித்துள்ளனர்.

சில நிமிடங்களில், கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு சென்றதால், போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் எல்லாம், பறக்க ஆரம்பித்தன. சற்று நேரத்தில், சாமியாடிய பெண்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்துள்ளனர்.

ஆனால், அச்சமயத்தில், எக்காரணத்தைக் கொண்டு சாமி பாடல் பாடுவது நிறுத்தப்படவில்லை.பின்னர், மயக்கமடைந்த பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து, சாந்தமாக அமர வைத்துள்ளனர். 

திமுக மகளிரணி பொதுக்கூட்டத்தில் பக்தி பாடலுக்கு பெண்கள் சாமியாட்டம் ஆடியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாமியாடி சாலை வசதி கேட்ட பெண்... லட்டு கொடுத்து பதிலளித்த அமைச்சர்!!