தலிபான்களுக்கு தண்டனை கொடுத்த 200 பெண் நீதிபதிகள் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வரும் கொடுமை...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தலிபான்களுக்கு தண்டனை கொடுத்த  200 பெண் நீதிபதிகள் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வரும் கொடுமை...

அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றினர். கடந்த முறை 1996 முதல் 2001 வரை கொடுமையான சட்டங்கள் மூலம் ஆட்சி நடத்தியதால் தலிபான்கள் பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்தனர். குறிப்பாக பெண்கள் உரிமை தாலிபான் ஆட்சியில் நசுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை குறிவைத்து தற்போது தாக்குதல்களும், கொலைகளும் ஆப்கனில் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

காபுலை கைப்பற்றிய பின்னர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த அல்கொய்தா பயங்கரவாதிகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றவாளிகளை தலிபான்கள் விடுவித்துள்ளதை உலக நாடுகள் அனைத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் கெடுபிடி காட்டும் தலிபான்களாலும், முன்னதாக இதே கைதிகளுக்கு தண்டனை விதித்த பெண் நீதிபதிகள் சுமார் 200 பேர் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி இண்டிபெண்டண்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பெண் நீதிபதி ஒருவர் கூறுகையில், நாங்கர்கர் மாகாணத்தில் நான் வசித்து வந்த பகுதியில் இருந்து நான் வேறு இடத்தில் தலைமறைவாக இருப்பதாகவும், எங்கள் பகுதிக்கு சென்ற தாலிபான்கள் இங்கே பெண் நீதிபதிகள் யாரேனும் வசிக்கிறார்களா என விசாரித்துள்ளனர்.

தலிபான்கள் என்னை கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் என்னை கொலை செய்துவிடுவார்கள் என வேதனையுடன் கூறினார். 8 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை வன்கொடுமை செய்ததற்காக என்னால் தண்டனை பெற்ற இளம் தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவன் என்னை கொடுமைப்படுத்துவதற்காக தேடி வருவதாக கேள்விப்பட்டேன்.

நான் அவனுக்கு தண்டனை கொடுக்கும்போதே, நான் வெளியே வரும் போது உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறினார். அப்போது இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது வெளியே வந்த பின் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினான் என கூறியுள்ளார்.