ஆப்கானிதானுக்காக அமெரிக்க வீரர்கள் பலியாவதா? பைடன் கேள்வி  

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் முடிவில் தான் உறுதியாக உள்ளதாகவும், அந்நாட்டின் எதிர்காலத்திற்காக அமெரிக்க வீரர்கள் சண்டையிட்டு மடிவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிதானுக்காக அமெரிக்க வீரர்கள் பலியாவதா? பைடன் கேள்வி   

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டை பத்தே நாட்களுக்குள் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தன்னிச்சையான முடிவே, இந்த நிலைக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஊடகங்களைச் சந்தித்த ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக அமெரிக்கப் படைகள் போரிட்டதற்கான இலக்கை அடைந்து விட்டதாகத் தெரிவித்தார். 2001ம் ஆண்டு நியுயார்க் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா அமைப்பினரை முழுமையாக ஒழித்துவிட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் நாட்டிற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிப்பதற்காகவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும் ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது அமெரிக்காவின் பணி அல்ல என்றும் குறிப்பிட்டார். இதுவரை பல டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அங்கு செலவு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஆப்கன் படைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்தும், வாய்ப்பை பயன்படுத்த அவர்கள் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டினார். வேறொரு நாட்டுக்காக அமெரிக்க வீரர்கள் மடிவதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆப்கான் ராணுவ வீரர்கள் தலிபான்களை எதிர்த்து போரிடாமல் சரணடையும் போது அமெரிக்க வீரர்கள் ஏன் போரிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் தற்போது ஆப்கானிஸ்தானில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி தரப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.