ராணி எலிசபெத் முடிசூட்டி 70 ஆண்டுகள் நிறைவு...விழாக்கோலம் பூண்ட லண்டன் மாநகரம்..!

இங்கிலாந்து ராணி எலிசபெத் முடி சூட்டி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராணுவ அணிவகுப்பு, இசை நிகழ்ச்சி என லண்டன் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

ராணி எலிசபெத் முடிசூட்டி 70 ஆண்டுகள் நிறைவு...விழாக்கோலம் பூண்ட லண்டன் மாநகரம்..!

இங்கிலாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவரும், தற்போது உலகின் மூத்த மன்னர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி எலிசபெத்,  1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தனது தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ராணியாக முடி சூடினார். தற்போது அவர் ஆட்சிப் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை 4 நாள் விழாவாக நாடு கொண்டாடுகிறது. விழா தொடக்கத்தையொட்டி ராணியின் பிறந்தநாள் அணிவகுப்பு என்று அழைக்கப்படும், "ட்ரூப்பிங் தி கலர்"  என்ற ராணுவ அணி வகுப்பு நடைபெற்றது.

260 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்த ராணுவ அணிவகுப்பை வயோதிகம் காரணமாக முதன்முறையாக பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் குடும்பத்தினருடன் இணைந்து நின்றவாறு பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ராணி எலிசபெத் ஏற்றுக் கொண்டார். ராணுவ குதிரைப் படை அணி வகுப்பில் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

70-ம் ஆண்டை குறிக்கும் வகையில் 70 என்ற எழுத்து வடிவில் விமானப்படை விமானங்கள் வானில் அணிவகுத்து ராணிக்கு வாழ்த்துத் தெரிவித்தன. 

இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். அரண்மனை அருகில் பாப் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கனடா மற்றும் சைப்ரஸ் நாடுகளிலும் ராணி எலிசபெத்தின் 70-ம் ஆண்டு ஆட்சி நிறைவு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.