எகிப்தின் உயரிய விருது : பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்த அதிபர்!

எகிப்தின் உயரிய விருது : பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்த அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். எகிப்தின் முஸ்தபா மட்புலி விமான நிலையம் சென்றடைந்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின்போது வீர மரணம் அடைந்த 3 ஆயிரத்து 799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். 

இதையும் படிக்க : களைகட்டிய அருவிகள்...விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்...!

மேலும், 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில், அதிபர் அப்துல் பத அல் சிசியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பின், எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி நைல் விருதை, அதிபர் அப்துல் பதா பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.