பல வாரங்களுக்குப் பிறகு நின்ற குண்டு வீச்சு... இயல்பு நிலைக்குத் திரும்பும் மரியுபோல் நகர மக்கள்!!

பல நாட்கள் குண்டு வீச்சு தாக்குதலுக்குப் பின், மரியுபோல் நகர மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

பல வாரங்களுக்குப் பிறகு நின்ற குண்டு வீச்சு... இயல்பு நிலைக்குத் திரும்பும் மரியுபோல் நகர மக்கள்!!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அதிகம் உருக்குலைந்தது மரியுபோல் நகரம்தான். போர் நடந்த இடம் என்று வரலாற்றில் இடம்பெறும் அளவிற்கு அந்த நகரம் சின்னாபின்னமாகியுள்ளது. கிட்டத்தட்ட 90 நாட்களாக தொடர் தாக்குதலை சந்தித்து வந்தது.

இறுதியாக அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை போர்க் கைதிகளாக சிறை பிடித்ததையடுத்து, மரியுபோல் நகரம் ரஷ்யாவின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது.

குண்டுச்சத்தம் நின்றதையடுத்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வீதிகளுக்கு வந்தனர். ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாதனங்களை சார்ஜ் செய்வது, பழங்காலம் போன்று பண்டமாற்று முறையில் காய்கறிகள், காலணிகள் வாங்குவது, உணவுக்காக வரிசையில் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அதேபோல், அங்குள்ள பேருந்து நிலையத்தில் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

போர் என்றால் எதிரி நாட்டால் சேதம் ஏற்படுவது வழக்கம். ஆனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் இருந்து தாக்குதல் நடத்த, உக்ரைனும் அதற்கு ஒரு காரணமானது. குடியிருப்புகள் தரைமட்டம், குடிநீர் தட்டுப்பாடு, மின்சாரம் இல்லாமை என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், நகரை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே அழிக்கப்பட்ட மரியுபோல் நகரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று ரஷ்யா உறுதி அளித்துள்ளது.