காலநிலை மாற்றம்: "பாதிப்புகள் மிக தொலைவில் இல்லை" பிரதமரின் முதன்மை செயலாளர் தகவல்!

காலநிலை மாற்றம்: "பாதிப்புகள் மிக தொலைவில் இல்லை" பிரதமரின் முதன்மை செயலாளர் தகவல்!

காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட போகும் பாதிப்புகள் மிக தொலைவில் இல்லை, உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரையும் இது பாதிக்கும் என பிரதமரின் முதன்மை செயலாளர் பி. கே.மிஸ்ரா பேசியுள்ளார்.

G20 நாடுகளுக்கு இடையிலான பேரிடர் ஆபத்து குறைப்பு தொடர்பான 3வது பணிக்குழு கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று முதல் 26ஆம் தேதி வரை பேரிடர் ஆபத்து குறைப்பு தொடர்பான 3வது மற்றும் இறுதி பணிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் பேரிடர் ஆபத்து குறைப்பு தொடர்பான அறிக்கையை G20 நாடுகளுக்கு இடையிலான தலைவரிடம் சமர்ப்பிக்கபட உள்ளது.

ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள், பேரழிவு மற்றும் பருவநிலை நெகிழ்திறன் உள்கட்டமைப்பு, பேரழிவு அபாயத் தணிப்புக்கான நிதி கட்டமைப்பு, பேரழிவு மீட்பு அமைப்பு மற்றும் பேரழிவு அபாயத் தணிப்புக்கான சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறை ஆகிய 5 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. கே.மிஸ்ரா முன்னிலையில் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது. ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி மாமி மிசுடோரி, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அமைப்புகள் மற்றும் உத்திகளுக்கான துணைத் தலைவர் டாக்டர் ராதித்யா ஜாதி, புதுதில்லியில் உள்ள பிரேசில் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திரு பெட்ரோ பியாசி டி சோசா, ஜி 20 ஷெர்பா தூதர் திரு அமிதாப் காந்த் உள்ளிட்ட G20 நாடுகளை சார்ந்த நிர்வாகிகள் பங் கேற்றனர்.

இந்நிகழ்வில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி. கே.மிஸ்ரா பேசியதாவது,

காலநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட போகும் பாதிப்புகள் மிக தொலைவில் இல்லை, உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரையும் இது பாதிக்கும். இந்த புதிய பேரிடர்களை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும். இந்த பேரிடர்களை தவிர்க்க பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஆபத்து ஏற்பட்ட பின் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை கடைபிடிக்க முடியாது என்பதால், ஆபத்துக்களை முன் கூட்டியே கண்டறிந்து பேரிடர் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பேரிடர் கால நடவடிக்கைகளை இந்தியாவில் முழுமையாக மாற்றி அமைத்து உள்ளோம். பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்காக தனியார் நிதியைத் திரட்டுவது ஒரு சவாலாக இருந்து வருகிறது, ஆனால் அது இல்லாமல் அனைத்து பேரிடர் அபாயக் குறைப்புத் தேவைகளையும் நிவர்த்தி செய்வதில் அரசு நிறுவனங்கள் வெகுதூரம் செல்ல முடியாது. என தெரிவித்தார்.  

மேலும், பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் தனியார் நிதியை ஈர்க்க அரசாங்கங்கள் என்ன வகையான சூழலை உருவாக்க வேண்டும்?  பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் தனியார் முதலீடு பங்கு என்பது பெருநிறுவன சமூகப் பொறுப்பின் வெளிப்பாடாக மட்டும் இல்லாமல், நிறுவனங்களின் முக்கிய வணிகத்தின் ஒரு பகுதியாக இருப்பதை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

இதையும் படிக்க:கனிமொழி குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் எம்.எல்.ஏ கைது!