"யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை" மைத்ரிபால சிறிசேன மறுப்பு!

"யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை" மைத்ரிபால சிறிசேன மறுப்பு!

யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை எனவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரி எடுக்கப்பட்டு, இறுதி யுத்தத்தில் மீட்கப்பட்ட உடல் அவருடையதே என உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறியிருந்தது.எனினும் அது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இராணுவத்தினர் மறுத்திருந்தனர்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன, உண்மையில் தாம் இறுதி இரண்டு வாரங்களே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் எனவும் இந்த மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக அன்று தாம் அறிந்திருக்கவில்லை எனவும் இன்றும் அது தொடர்பாக எந்தவொன்றும் தமக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.


எனினும் தாமே இறுதி யுத்தத்தை நடத்தியதாகவும் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமக்கே பாரிய பங்கு உள்ளதாகவும்  ஜனாதிபதியாக இருந்த போது, மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜனாதிபதியாக இருந்த போது இலங்கையின் சுதந்திர தின உரையிலும் மைத்திரிபால சிறிசேன, இந்த விடயத்தை கூறியிருந்ததையும் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கு தொடர்ந்தும் பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ, வெளிநாட்டில் இருந்த போதிலும் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளாார்.

தம்மிடம் பொறுப்புகளை கையளித்துவிட்டு ஜனாதிபதி அப்போது வெளிநாடு சென்றிருந்தார் எனவும் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளை தாம் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என மீண்டும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு விடயமும் தமக்கு அறிக்கையிடப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க:தெருவில் சாதிபெயர்: அயராது போராடி மாற்றியமைத்த இளம்பெண்!