நெருங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... உலக மக்களின் நட்புறவை உணர்த்தும் ஒலிம்பிக் வளையங்கள்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில் ஒலிம்பிக் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

நெருங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... உலக மக்களின் நட்புறவை உணர்த்தும் ஒலிம்பிக் வளையங்கள்...
உலகலாவிய ஒரு நிறுவனமாகட்டும் அல்லது அமைப்பாகட்டும், ஏன் நாடாக இருந்தாலும் சரி... அதனை அடையாளப் படுத்துவதற்கென தனிச்சிறப்பு வாய்ந்த சின்னங்கள் இருக்கும். அவ்வாறிருக்கும் போது விளையாட்டு என்ற பேராற்றல் மூலம், உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் சின்னங்கள் இன்றியமையாதவையே.
 
அவ்வகையில் ஒலிம்பிக்கின் சின்னங்களாக கொடி, தீச்சுடர், மஸ்கட் பொம்மைகள் என பல இருந்தாலும், இவற்றில் முக்கியத்துவம் பெறுவது ஒலிம்பிக் கொடி எனலாம். இந்த ஒலிம்பிக் கொடியில், வெவ்வேறு வண்ணங்களால் ஆன ஒத்த அளவுடைய 5 வளையங்கள் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நவீன ஒலிம்பிக் போட்டி உருவாகக் காரணமாக இருந்தவரான, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’பியரி டி கூபர்டீன்’ என்பவரால் 1912ஆம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
 
ஒலிம்பிக் கொடியின் கீழ்ப்பகுதியில் 2 வளையங்கள், அதன் மேல் 3 வளையங்கள் என மொத்தம் 5 வளையங்கள் பக்கவாட்டில் சிறு இடைவெளியுடன் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு வளையமும் குறைந்தபட்சம் ஒரு வளையத்துடனாவது பிணைக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். உலகில் உள்ள அனைத்து மக்களிடையே விளையாட்டின் மூலம் நட்புறவை உண்டாக்கும் விதத்தில் அமைக்கப்பட்டதே இந்த ஒலிம்பிக் கொடி. எனவே தான் இந்த வளையங்கள் இவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன.
 
மேலும், இதில் உள்ள 5 வளையங்களும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா என உலகின் முக்கியமான ஐந்து கண்டங்களை குறிப்பதாக, ஒலிம்பிக் சட்டத்தின் 8ஆவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒலிம்பிக் கொடியின் 5 வண்ணங்களில், நீலம் ஆஸ்திரேலியாவையும், கருப்பு ஆப்பிரிக்காவையும், சிவப்பு அமெரிக்காவையும், மஞ்சள் ஆசியாவையும் மற்றும் பச்சை ஐரோப்பாவையும் குறிப்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 
 
வெள்ளை நிறத்தில் எவ்வித பார்டரும் இல்லாத கொடியின் மத்தியில் இந்த ஐந்து வளையங்கள் அமைந்திருக்கும். இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதாலேயே, இந்த நிறங்களை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும், நவீன ஒலிம்பிக்கின் தந்தையுமான பியரி டி கூபர்டீன் தெரிவித்துள்ளார்.