மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல்..!

இரு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது, அதிபர் விளாதிமிர் புதின் கொடுக்கும் இறுதி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தாக்குதல்..!

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கிய போது, ரஷ்யாவின் முக்கிய குறி கீவ் ஆகத்தான் இருந்தது. ஆனால், உக்ரைன் ராணுவத்தின் கடும் எதிர் தாக்குதலை நடத்திய நிலையில், கவனத்தை கிழக்கு உக்ரைனை நோக்கித் திருப்பிய புதின், டான்பாஸ் பிராந்தியத்தை கிர்மியாவுடன் இணைக்கும் வகையில் போர் வியூகத்தை மாற்றினார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்து வருகிறது. இந்த நிலையில்தான் இரு மாதங்களுக்குப் பின் கீவ் மீது நேற்று அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ரயில்வே பணிமனை தாக்கப்பட்டதாக உக்ரைனும், ஐரோப்பிய நாடுகள் வழங்கிய பீரங்கிகளை அழித்ததாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளன. தாக்குதல் தொடங்கியுள்ளதால் இயல்பு நிலைக்கு திரும்பி நிம்மதியாக இருந்த தலைநகர் மக்கள், தற்போது மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வான்வழித் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கினால் ரஷ்யாவின் தாக்குதல் இலக்கு மாறும் என்று அதிபர் புதின் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேற்குலகம் எதிராக செயல்பட்டால் ரஷ்யா தகுந்த முடிவுகளை எடுக்கும் என்றும் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்தி இதுவரை தாக்காத இலக்குகளையும் தாக்குவோம் என்றும் கூறியிருந்தார். அந்த அடிப்படையில்தான் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இது உக்ரைனுக்கும் மேற்குலகிற்கும் புதின் கொடுத்துள்ள இறுதி எச்சரிக்கை என்றும்  இதனால் எதிர்வரும் நாட்களில் போர் மேலும் கடுமையாகும் என்றும் கருதப்படுகிறது.