தொடரும் போரால் சரியும் உலகப் பொருளாதாரம்... எரிபொருள் விலை உயர்வால் பொருட்களும் விலையேற்றம்!!

ரஷ்யா-உக்ரைன் போரால் பல்வேறு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து உலகப் பொருளாதாரம் தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

தொடரும் போரால் சரியும் உலகப் பொருளாதாரம்... எரிபொருள் விலை உயர்வால் பொருட்களும் விலையேற்றம்!!

நீடித்து வரும் போரால் எரிபொருள் விலையானது சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. அது மற்ற அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கச் செய்கிறது. அந்தவகையில், தாய்லாந்து மற்றும் தென் கொரியாவில் உணவு மற்றும் எரிபொருளுக்கான கணிசமான விலை உயர்வைக் கண்டுள்ளன.

தாய்லாந்தின் பணவீக்க விகிதம் ஜுன் மாதத்தில் 5.61 லிருந்து 7.66 சதவீதத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கு எரிபொருள் விலை உயர்வே முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில் மொத்தமாக 213 பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் நுகர்வோர் விலைக் குறியீடு 108.22 ஆக உயர்ந்துள்ளது. இது 1998 நவம்பர் மாதத்திற்கு பின் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயர்வு ஆகும். சர்வதேச சந்தையில் மூலப்பொருட்கள், தானியங்கள் மற்றும் எரிபொருளின் விலைகள் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.