பெண் பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன் இராணுவம்…ரஷ்யா குற்றச்சாட்டு!

பெண் பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன் இராணுவம்…ரஷ்யா குற்றச்சாட்டு!

உக்ரைனின் சிறப்பு படைகள் கார் குண்டுவெடிப்பை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் 29 வயதான டரியா டுகினா, மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் தனது காரில் பொருத்தப்பட்ட ரிமோட் மூலம் இயக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் கடந்த ஆகஸ்ட்-20 அன்று இறந்தார்.

ரஷ்ய சிந்தனையாளர் அலெக்சாண்டர் டுகின்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை ஆதரித்த அவரது தந்தை அலெக்சாண்டர் டுகின், குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு தனது மகளுடனான பயண திட்டத்தை மாற்றியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அலெக்சாண்டர் டுகின் ஒரு எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர். மேற்குலக நாடுகளில் சிலர் இவரை "புடினின் மூளை" என்று அழைப்பார்கள்.

உக்ரைன் கொலையாளி

ஆகஸ்ட்-22 அன்று ரஷ்யாவின் உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதல் உக்ரைனின் சிறப்புப் படைகளால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடால்யா வோக் எனும் உக்ரைன் நாட்டவர் கொலையைச் செய்துவிட்டு எஸ்டோனியா நாட்டுக்குத் தப்பிச் சென்றதாக  எஃப்.எஸ். பி கூறியது. வோக் மற்றும் அவரது 12 வயது மகளும் ஜூலை மாதம் ரஷ்யாவிற்கு வந்து, டுகின் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, டுகினாவின் வாழ்க்கை முறையை ஆராய்ந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இந்தத் தாக்குதலுக்காக வோக் திட்டம் தீட்டியதாக  எஃப்.எஸ்.பி கூறியுள்ளது.

மேலும் படிக்க : பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன்…திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உறுதிபடுத்திய உளவுத்துறை

உக்ரைன் அரசாங்கமோ ரஷ்யாவின் தேசியவாத சிந்தனையாளர் அலெக்சாண்டர் டுகின் மகள் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பில் தமக்கு தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது. ஆனால் ரஷ்ய உளவுத்துறை கொலையில் ஈடுபட்ட உக்ரைனின் அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி, கண்காணிப்பு கேமிராவில் பதிவான கொலையாளியை அடையாளம்காட்டும் காணொளியையும், அவரது இராணுவ அடையாள அட்டையையும் வெளியிட்டுள்ளது.

- ஜோஸ்