அபகரிக்கப்படும் சொத்துகள்…ப்ரான்ஸ் வாழ் புதுச்சேரி மக்கள் போராட்டம்!

அபகரிக்கப்படும் சொத்துகள்…ப்ரான்ஸ் வாழ் புதுச்சேரி மக்கள் போராட்டம்!

பிரெஞ்சு குடியுரிமை பெற்று பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் செயல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரான்ஸ் நாட்டில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரெஞ்ச் கட்டுப்பாட்டில் புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. புதுச்சேரிக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு சென்ற பிரெஞ்சு காரர்கள் அவர்களது குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியில் தங்கள் விருப்பபடி வாழலாம் என இந்திய அரசிடம் ஒப்பந்தமிட்டு சென்றனர்.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் பல நூற்றாண்டுகாலமாக தாங்கள் வசித்த வீட்டில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் நாட்டில் தான் வசித்து வருகின்றனர். இருப்பினும் புதுச்சேரியில் உள்ள வீடு உள்ளிட்ட சொத்துக்களை பாதுகாப்பாளரை நியமித்து செல்கின்றனர் அல்லது பூட்டி விட்டு சென்று விடுகின்றனர்.

சொத்துகளை அபகரிக்கும் முயற்சி

ஆண்டுக்கு ஒரு மாதம் புதுச்சேரிக்கு வந்து தனது வீட்டில் வந்து வசித்து வீட்டை பராமரித்து வருகின்றனர். அவ்வாறு பல ஆண்டுகளாக இந்தியாவிற்கு வராதவர்களின் சொத்துக்கள், அல்லது பாதுகாப்பாளர் மூலமாக அபகரிக்கும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பிரெஞ்சு தூதரகம் புதுச்சேரி அரசை அவ்வப்போது வலியுறுத்தி வருகின்றது. ஆனால் அவர்களின் சொத்துக்களை ஏதாவது ஒருவழியாக அபகரிக்கும் செயல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

கவன ஈர்ப்பு போராட்டம்

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் பாரீஸ் நகரில் மியட் என்ற இடத்தில் கூட்டம் நடத்தி போராட்டத்தின் மூலம் தஙகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களுடைய புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை அபகரிக்க நினைப்போர், குடியுரிமை பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரான்ஸ் அரசு இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து பிரெஞ்சு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தூதரக அதிகாரிகளிடம் புகார் மனுவையும் அளித்துள்ளனர்.