12 மணி நேர வேலை திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு...!!

12 மணி நேர வேலை திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு...!!

திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த 21ம் தேதி கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவின்படி, தொழிற்சாலைகள் சட்டத்தில் ஆறு முக்கியப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வேலை நேரத்தை வாரத்துக்கு 48 மணி நேரம் என்பதை மாற்றியமைப்பது, தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகமாக்குவது போன்ற சட்டப் பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு தொழிற்சங்கங்களும் தங்களது எதிா்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில், சட்டத் திருத்தம் குறித்து விளக்குவதற்காக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முடிவு செய்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. இதில் கலந்து கொண்ட திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவே இச்சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தற்போது இப்பிரச்சனையி்ல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.