ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல...3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பு!

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல...3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பு!

ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும் என 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் ஆட்க்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

2 நாட்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காணொலி மூலம் ஆஜராகி வாதித்தார். இதேபோல், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

இதையும் படிக்க : விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3 ...தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்!

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த 3-வது நீதிபதி சி.வி.காத்திகேயன், கைது செய்யப்படுபவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும், இந்த வழக்கு குறித்த நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்றும் கூறினார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான் என்று குறிப்பிட்ட  3-வது நீதிபதி சிவி கார்த்திகேயன், குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கினார். 

அத்துடன் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, ஆட்க்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவலாக கருத முடியாது என்றும், கைதாக போவது செந்தில்பாலாஜிக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால் அமலாக்கத்துறையின் கைதை சட்டவிரோதமாக கருத முடியாது எனவும் நீதிபதி சிவி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.