நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரானார் திரெளபதி முர்மு..!

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரானார் திரெளபதி முர்மு..!

குடியரசு தலைவர்  தேர்தலில் அதிக வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்ற திரெளபதி முர்மு இன்று  நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 

குடியரசுத் தலைவர் தேர்தல்:

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, புதிய குடியரசு தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கட்சியின் சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். 

திரெளபதி முர்மு வெற்றி:

குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதனையடுத்து,  நாட்டின் 15  வது  குடியரசு தலைவராக  திரௌபதி முர்மு அதிகாரபூர்வமாக 

குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு:

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக படியான வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்ற திரெளபதி முர்மு, இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்முலம் பழங்குடியின பெண், நாட்டின் முதல் குடிமகள் ஆனார் என்ற பெருமையை அவர் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுதலைவர் ராமநாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை:

குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு, அதன்பின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், தொடக்கக் கல்வி கூட கனவாக இருந்த தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததன் மூலம், ஏழை எளிய மக்களும் இனி குடியரசு தலைவராக முடியும் என்பதை நிரூபிப்பதாக கூறினார். ஏழைகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக தான் நான் குடியரசு தலைவராக ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  மேலும் இந்தியர்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகளுக்கு மத்தியில் நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர்,  புதிய பொறுப்பை நிறைவேற்ற உறுப்பினர்களின் நம்பிக்கையும் ஆதரவும் தனக்கு பெரும் பலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.  அதுமட்டுமல்லாமல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றமே, முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவேன் என்று உறுதியளித்தார்.

முன்னதாக, நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிந்ததையொட்டி, ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.