கோடநாடு என்று பெயர் கேட்டதும் அலண்டு ஓடிய எடப்பாடி... அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அல்லுகிளப்பிய ஸ்டாலின்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சயானிடம் போலீசார் 3 மணி நேரம் நடத்திய விசாரணையில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் பெயரை, வெளியிட்டதாக தகவல்கள் உலா வருகிறது.

கோடநாடு என்று பெயர் கேட்டதும் அலண்டு ஓடிய எடப்பாடி... அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அல்லுகிளப்பிய ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது.  இதன் மொத்த மதிப்பு 2000 கோடி ரூபாய் தேரும் என கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது இந்த எஸ்டேட் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். ஜெயலலிதா மறைந்த பிறகு , 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 

மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த வழக்கு தீவிரமடைந்த நிலையில், விசாரணை மேற்கொண்டதில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால், போலீசார் அவரை தேடினர். 

இந்த நிலையில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்ந்ததால், பெரும் பரபரப்புக்கு காரணமானது இந்த வழக்கு.

இப்போது இவ்வழக்கு, கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் ஊட்டியில் இருந்து வரும் நிலையில், 8 பேர் ஜாமீனில் உள்ளனர். இந்த நிலையில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

 நேற்று ஊட்டியில் நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சயானிடம் நீலகிரி போலீஸ் எஸ்.பி. ஆஷிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

3 மணி நேரம் சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜிடம் இருந்து கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை அதிமுகவின் "முக்கிய புள்ளியிடம்" கொடுத்ததாகவும், கொலை வழக்கில் கூடலூர் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதால் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் சயன் கொடுத்த வாக்குமூலத்தில் அதிமுகவின் மிக முக்கிய புள்ளி பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை விவகார விசாரணை தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது. 

அவர்கள் 'பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அவைக்கு வந்திருந்தனர். பின்னர் பேரவை வாயிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.