சென்னையில் க்ரேனை திருடி வேறொரு மாநிலத்திற்கு விற்ற திருடர்கள்! : 5 பேர் கைது!

சென்னையில் க்ரேனை திருடி வேறொரு மாநிலத்திற்கு விற்ற திருடர்கள்! : 5 பேர் கைது!

சென்னை: சென்னையில், மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த க்ரேனை திருடி வேறொரு மாநிலத்திற்கு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். தற்போது மேடவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக, தனது 40 லட்சம் மதிப்பிலான க்ரேன் வாகனத்தை மெட்ரோ நிர்வாகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி மேடவாக்கம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது க்ரேன் வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள பகுதியின் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

அப்பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து க்ரேனை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை கண்ட காவலர்கள், சிசிடிவி கேமராவை பின்தொடர ஆரம்பித்தனர். சென்னை மேடவாக்கம் தொடங்கி ஆந்திரா மாநிலம் கடப்பாவை தாண்டி சுமார் 250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து திருடு போன க்ரேன் வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடம் இருந்து மீட்கப்பட்ட க்ரேன் வாகனத்தை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். நரசிம்ம ரெட்டியின் கம்பெனிக்கு மாத தவனைக்கு க்ரேன் தேவைப்பட்டதால் கார்த்திக் என்பவரிடம் க்ரேன் வாடகைக்கு கேட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் க்ரேனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் நரசிம்ம ரெட்டியை கைது செய்து சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் நரசிம்ம ரெட்டியின் வாக்குமூலத்தை தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து கார்த்திக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கார்த்திக் நண்பரான சென்னை எண்ணூர் பகுதியில் மெட்ரோ ரயில் பணி செய்து வரும் முரளி என்பவரை தொடர்பு கொண்டு மாத வாடகைக்கு க்ரேன் உள்ளதா என கேட்டதை தொடர்ந்து முரளி அவரது நண்பரான மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணி செய்யும் சர்மா என்பவரை தொடர்பு கொண்டு மாத வாடகைக்கு க்ரேன் தேவைப்படுகிறது என்ற தகவலை கூறியுள்ளார்.

அதன் பின்னர் கார்த்திக், முரளி, சர்மா, திருநாவுக்கரசு என 4 பேர் சதி திட்டம் தீட்டி மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த க்ரேனை முரளி மற்றும் சர்மா இருவரும் திருடி சென்றனர். இருவர் மேடவாக்கத்தில் இருந்து திருடி சென்ற நிலையில் கார்த்திக் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் போரூர் சுங்கச்சாவடியில் காத்துகொண்டிருந்துள்ளனர்.

போரூர் சுங்கச்சாவடி சென்றதும் நான்கு பெரும் ஒன்றிணைந்து இருவர் பாதி தூரம் இருசக்கர வாகனத்தில் செல்வதும், இருவர் க்ரேனை ஓட்டி செல்வதுமாக மாறி மாறி ஓட்டிக்கொண்டு ஆந்திரா மாநிலம் சென்று நரசிம்ம ரெட்டியிடம் வாகனத்தை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் க்ரேன் வாகனத்தை மாத வாடகைக்கு நரசிம்ம ரெட்டியிடம் கொடுத்த பின்பு கார்த்திக், முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகிய நான்கு பெரும் ரூபாய் ஐந்து லட்சத்திற்கான ரொக்கப் பணம் மற்றும் மூன்று மாத வாடகைக்கான ரூபாய் ஐந்து லட்சத்திற்கான காசோலையை முன்கூட்டியே பெற்றுகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து முரளி, சர்மா, திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் கார்த்திக், எண்ணூர் மெட்ரோ ரயில் பணி ஊழியர் முரளி, மேடவாக்கம் மெட்ரோ ரயில் பணி ஊழியர் சர்மா, திருநாவுக்கரசு மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கிய நரசிம்ம ரெட்டி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் உள்ளவர் மாத வாடகைக்கு கேட்ட க்ரேனை சென்னை மேடவாக்கத்தில் நடைபெறும் மெட்ரோ பணிக்காக வாடகைக்கு விட்டதை லாவகமாக திருடி சென்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!