பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் 5 கோடி மோசடி; கணக்கியல் நிபுணர் கைது!

பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் 5 கோடி மோசடி; கணக்கியல் நிபுணர் கைது!

பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மூத்த கணக்கியல் நிபுணர் உட்பட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் 

சென்னை தரமணியில் உள்ள ஐடி பார்க்கில் Philips GBS LLP என்கிற நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான கணக்காளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

Phillips நிறுவனத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் பரிமாற்றம் மற்றும் பண பரிவர்த்தனை ஆகியவற்றை SAP என்னும் சாப்ட்வேர் டூல் மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சீனியர் அக்கவுண்டிங் ஸ்பெஷலிஸ்ட் என்கிற பணிக்கு அகஸ்டின் சிரில் என்பவர் பிலிப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியாகும். 

மேலும், இவர் பணிக்கு சேர்ந்ததிலிருந்து சரியான முறையில் பணியாற்றி வந்துள்ளார். இதனால் இவர் மீது  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேலாளர் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் SAP என்கிற Software toolயை இவரிடம் கையாளும்படி கொடுத்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய அகஸ்டின் சிரில் இவரது நண்பரான ராபின் கிறிஸ்டோபர் என்பவருடன் கூட்டு சேர்ந்து ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாட்டில் உள்ள அவருடைய உறவினர்கள் மூலமாக மெயில் அனுப்பி பிலிப்ஸ் நிறுவனத்தில் சிறுக சிறுக கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். 

இதனை அடுத்து  பிலிப்ஸ் நிறுவனத்தில் ஆடிட்டிங் நடைபெற்ற பொழுது 5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக பிலிப்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சென்னை காவல் ஆணையகரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். 

இந்த புகார் மனு அளித்த பிறகு அகஸ்டின் சிரில் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒரு வாரங்களாக தங்கி இருந்து முக்கிய குற்றவாளியான அகஸ்டின் சிரிலை கைது செய்தனர். மேலும் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 215 சவரன் தங்க நகைகள், வங்கியில் உள்ள 50 லட்சம் ரூபாய் பணம், கையில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்க பணம், ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம், லேப்டாப், மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க:சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்டம்: 2 முறை திருப்பி அனுப்பிய ஆளுநர், "ஆயுஷ் மருத்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே" குற்றச்சாட்டும் வேண்டுகைக் குழு!