போலீசுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

50 ரூபாய் கேட்டு ரத்தம் சொட்ட சொட்ட மாட்டு வியாபாரியை தாக்கிய போலீசை பிடித்து பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் - ஆரணி நெடுஞ்சாலையில் எட்டிவாடி பகுதியில் களம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி சுரேஷ், அவருடைய மகன் ராஜா ஆகிய இருவரும் பொய்கை சந்தையில் மாட்டை விற்பனை செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

களம்பூர் போலீஸ் எல்லையான எட்டிவாடி அருகே சப் இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு விக்னேஷ், ஹோம்காடு இளவரசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை காவலர் விக்னேஷ் நிறுத்தினர். அப்போது ராஜா, "நான் காலியாக வருகிறேன். பின்னால் வரும் வாகனத்தில் மாடு வருகிறது. அதில் காசு வாங்கிக் கொள்ளுங்கள்" எனக்கூறி 50 ரூபாய் கொடுத்துவிட்டு புறப்பட்டார். இதில் திருப்தி அடையாத காவலர் விக்னேஷ், ராஜாவின் வாகனத்தை பைக்கில் துரத்தி வந்து மறித்துள்ளார். அப்போது ராஜாவிடம் மேலும் பணம் கேட்டுள்ளார். இல்லையெனில் வாகனத்தை மீண்டும் சோதனைசாவடிக்கே விடும்படி கூறியுள்ளார். இதற்கு ராஜா வாக்குவாதம் செய்யவே கையில் வைத்திருந்த பைக் சாவியால் ஓங்கி கழுத்தில் குத்தினார். இதில் காயமடைந்த ராஜாவிற்கு ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த பின்னால் வந்த 20க்கும் மேற்பட்ட மாட்டு வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராஜாவை தாக்கிய போலீஸ் விக்னேஷூக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, களம்பூர் எஸ்ஐ சத்யா ஆகியோர் பாதிக்கப்பட்ட ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜாவை காயப்படுத்திய விக்னேஷ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆயுதப்படைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் பாதிக்கப்பட்ட ராஜா மற்றும் மற்றும் பொதுமக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.