என்.எல்.சி பொது மேலாளர் வீட்டில் தங்க,வைர நகைகள் கொள்ளை...!!

என்.எல்.சி பொது மேலாளர் வீட்டில் தங்க,வைர நகைகள் கொள்ளை...!!

 நெய்வேலி என்.எல்.சி பொது மேலாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை, 1 1/2கிலோ வெள்ளி, ஒரு லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 1.5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரியம், வட்டம் 11, காமராஜ் சாலையில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர் என்.எல்.சியில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர் நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். 

கணவன், மனைவி இருவரும் கடந்த 1-ம் தேதி கேரளா பாலக்காடுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் ரவிக்குமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது  வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு,  பீரோவை  உடைத்து அதிலிருந்து 6 பவுன் தங்க நகை,  1 1/2 கிலோ  வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் மதிப்பு வைர நகைகள், 1.50 லட்சம் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து ரவிக்குமார் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெய்வேலி என்எல்சி பொது மேலாளர் வீட்டில் மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.