ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மோசடி… மூவர் கைது!

கொளத்தூரில் நில உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தினை நில அபகரிப்பு செய்த மூவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆள்மாறாட்டம் செய்து ரூ. 1.5 கோடி மோசடி… மூவர் கைது!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விக்டர் டேனியல் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மனைவி காணிக்கம்  என்பவருக்கு சொந்தமான கொளத்தூர், மாங்காளி நீதிமான் நகரில் உள்ள 2400 சதுரடி கொண்ட காலிமனையை, காணிக்கம் என்ற போலியான நபரை வைத்து ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்துள்ளனர் என தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விக்டர் டேனியலின் மனைவியான காணிக்கம் பெயரில் கிரையம் பெற்ற சொத்தின் ஆவணத்தை போல் ஒரு போலி ஆவணத்தை தயார் செய்து வயதான பெண்மணி மூலம் அவரைப்போல ஆள்மாறாட்டம் செய்து, அந்த நிலத்தின் மேல் போலியான பல ஆவணங்களை மோசடியாக தயார் செய்துள்ளனர் என்பது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து நில அபகரிப்பு செய்த மோசடி நபர்களான அயனாவரத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், கொளத்தூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் மூதாட்டி காணிக்கம் போல ஆள்மாறாட்டம் செய்த நாகரத்தினம் ஆகிய மூவரையும்  மத்திய குற்றப்பிரிவின் நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டியான நாகரத்தினம் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.