உரிமையாளர்களை நிர்வாணமாக்கி நகை கொள்ளை...!!

உரிமையாளர்களை நிர்வாணமாக்கி நகை கொள்ளை...!!

நகைப்பட்டறை உரிமையாளர்களை நிர்வாணமாக்கி தாக்கி 400 கிராம் தங்க நகைகளுடன்  தப்பியோட முயன்ற ஊழியரை போலீசார் சாதுரியமாக மடக்கி பிடித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் சலாவூதின்(26) மற்றும் சக்ஜத்(26).  இவர்கள் இருவரும் இணைந்து பூங்கா டவுன் ராசாப்பா செட்டி தெருவில் கடந்த மூன்று மாதங்களாக நகைப்பட்டறை நடத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று அதிகாலை யானைகவுனி காவலர் பிரவீன் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பிளாட்பாரத்தில் வசித்து வரும் பாட்டி ஒருவர் இந்த நகைப்பட்டறையில் இருந்து அடிக்கடி அலறல் சத்தம் கேட்பதாக போலீசிடம் தெரிவித்துள்ளார். 

உடனடியாக காவலர் பிரவீன் குமார் கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்று கதவை தட்டியபோது திறக்காததால் சந்தேகமடைந்த காவலர் மேலும் சில காவலர்களை அழைத்துள்ளார்.  பின்னர் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது உரிமையாளர்கள் சலாவுதின் மற்றும் சக்ஜத் ஆகியோர் நிர்வாணமாக படுகாயங்களுடன் கட்டிப்போட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த அறையில் கேஸ் சிலிண்டர் திறந்திருப்பதை கண்ட போலீசார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து வந்த சமயத்தில் பின் வழியாக இரண்டு நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக போலீசார் அவர்களை துரத்தி சென்று மிண்ட் தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகே வைத்து ஒருவரை மடக்கி பிடித்தனர்.  மற்றொருவர் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து போலீசாரிடம் பிடிப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அதே நகைப்பட்டறையில் தங்கி ஊழியராக பணியாற்றி வரும் சுகந்தர்ராய்27) என்பது தெரியவந்தது.  நகைப்பட்டறையில் சுகந்தர் ராஜ், அஜாய் உட்பட நான்கு நபர்கள் பணியாற்றி வந்ததாகவும்,  கடந்த சில மாதங்களாக உரிமையாளர்கள் சம்பளம் கொடுக்காததால் இது குறித்து பல முறை கேட்டப்போது தட்டிக் கழித்து வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இன்று வழக்கம்போல அறையில் மது அருந்தி விட்டு சம்பளம் குறித்து உரிமையாளர்களிடம் கேட்டப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து உரிமையாளர்கள் இருவரையும் தாக்கி நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கேஸ் சிலிண்டரை திறந்துவைத்து, கடையில் இருந்த 400 கிராம் தங்க நகைகளுடன் தப்பி ஓட முயற்சி செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.  பிடிப்பட்ட சுகந்தர்ராயிடம் இருந்து கொள்ளையடித்த 400கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். 

இதனையடுத்து காயமடைந்த இரு உரிமையாளர்களையும் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவான அஜய்யை யானை கவுனி போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:  பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில நகை கொள்ளை...!!