செந்தில்  பாலாஜி ஜாமின் மனு வழக்கில் இன்று தீா்ப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கவுள்ளது. 

சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். ஜாமின் கோரி ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத்தொடா்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவா்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டாா்.

தொடா்ந்து அமலாக்கத் துறை தரப்பில், சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியும். ஆனால், அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கவுள்ளது.