அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு இன்று விசாரணை!!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக சுமாா் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமா்வு நீதிமன்றம் தான், ஜாமின் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவால்  தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும்  அறுவை சிகிச்சை செய்ததில்  முழுமையாக குணமடையாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டு  செந்தில்பாலாஜி ஜாமின் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.