விசாரணைக்கு சென்ற காவலர்களை, ஆயுதத்துடன் மிரட்டிய ஆசாமிகள்!

விசாரணைக்கு சென்ற காவலர்களை, ஆயுதத்துடன் மிரட்டிய ஆசாமிகள்!

விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை மது போதையில் அரிவாளுடன் இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2-ம் தேதியன்று தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்துக்கு போன் கால் ஒன்று வந்தது. போனில் மறுமுனையில் பேசிய ஒருவர், தென்கரை அருகே உள்ள தோட்டிக் காலனியில், போதை ஆசாமிகள் இரண்டு பேர் அரிவாளைக் காட்டி மிரட்டுவதாக பதற்றத்துடன் கூறியுள்ளார். 

உடனடியாக தென்கரை காவல்நிலையத்தின் இரண்டு காவலர்கள் , பைக்கில் சம்பவ இடத்தை அடைந்தனர். அங்கு தீபக் ரவிச்சந்திரன் என்பவரும், காமராஜ் என்பவரும் மதுபோதையில் சலம்பிக் கொண்டிருந்ததோடு பிரபாகரன் என்பவரது வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வீட்டில் பிரபாகரன் இல்லாத காரணத்தால் அவரது தங்கை ஹேமலதாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் ஹேமலதா அளித்த புகாரின் பேரிலேயே காவல் துறையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். 

ஆனால் அங்கு சென்று பார்த்தால் விசாரணைக்கு வந்த போலீசாரிடமே, போதை ஆசாமிகள் இருவரும் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இந்த தெருவுக்குள் போலீசார் வரவேண்டுமானால், ஊர் தலைவரிடம் அனுமதி வாங்கிவிட்டுத் தான் வரவேண்டும் என்று அடாவடியாக பேசியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத காவலர்கள் பைக்கை விட்டு இறங்காமலேயே பேச்சு கொடுத்ததோடு, சம்பவத்தை வீடியோவும் எடுத்துக் கொண்டனர்.  

வீடியோ எடுப்பதைப் பார்த்து மேலும் ஆவேசமடைந்த போதை ஆசாமி, ஓடிப்போய் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்து, உன்னை வெட்டாமல் விட மாட்டேன் என ஆத்திரத்தோடு கடத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த அந்த பகுதி பெண்கள் காவலர்களிடம் காலில் விழுந்து கெஞ்சி இங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்துக்கு திரும்பிய காவலர்கள், இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்க, பின்னர் காவலர் படை, தோட்டிக் காலனியை அடைந்தது.  

காவலர்களை ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் திட்டியதுடன், விசாரணை செய்வதற்கு இடையூறாக இருந்த தீபக் ரவிச்சந்திரனை கைது செய்தனர் போலீசார். 

தீபக் கைதானதைக் கேள்விப்பட்ட காமராஜ் ஊரை விட்டே தப்பியோடிய நிலையில் அவரையும் பிடிப்பதற்கு காவலர்கள் பொறி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம்", பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!