மூன்று நைட்டி கொள்ளையர்கள் கைது! போலீசார் தடாலடி!

நகை கடையின் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகள் கொள்ளை போன வழக்கில், ஆறு மாதங்களுக்கு பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நைட்டி கொள்ளையர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையனைத் தேடி போலீசார் வலைவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நைட்டி கொள்ளையர்கள் கைது! போலீசார் தடாலடி!
Published on
Updated on
2 min read

திருப்பூர்: பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், வயது 45. இவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் எதிரே ஸ்ரீ ராஜேஸ்வரி ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஆறு சவரன் தங்க நகைகளும்,ஆறு கிலோ வெள்ளி பொருட்களையும் மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள  சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது நைட்டி அணிந்து வந்த கொள்ளையரை தேடி வந்தனர். காவல் நிலையம் எதிரில் நகை கடையின் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரவாரி கிராமத்தில் உள்ள ஒரு நகைக்கடையை உடைத்து 290 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனை, மாவட்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்லடம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் எதிரே நகைக்கடையின் பூட்டை உடைத்து நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் பற்றி தெரியவந்தது.

அது மட்டுமின்றி, பெண்கள் போல நைட்டி அணிந்து போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்து தப்பியது போலவே கள்ளக்குறிச்சியிலும் நகை கொள்ளை நடந்திருப்பது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த வடமாநில கொள்ளையர்கள் இந்த இரு நகை கடை கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லாலா புலா ரத்தோட் 49,அஜய் பகவான் நானாவத் 41, ஜானல் மதியா நானாவத் 41 ஆகிய மூவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார் பல்லடத்தில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த இரண்டு நாட்களாக போலீஸ்க்காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில் பிடிபட்ட மூன்று வட மாநில கொள்ளையர்களுக்கும் காமநாயக்கன்பாளையம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 800 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீஸ்காவல் முடிவடைந்ததால்  கொள்ளையர்கள் மூவரையும் இன்று பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி பின்னர் மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நைட்டி அணிந்து நகைக்கடை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதான வழக்கில் தொடர்புடைய  தலை மறைவு குற்றவாளி ராம்தாஸ் குலாப் சிங் ரத்தோட் என்பவனை காமநாயக்கன்பாளையம் போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com