நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!

நிலத்தை அபகரிக்கும் முயற்சியை சகித்துகொள்ள முடியாது: உயர்நீதிமன்றம்!!

கோவில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள சுந்தரேஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை, கோவூர் வேளாண் கூட்டுறவு சங்கம் குத்தகைக்கு வாங்கி, அது விவசாயம் செய்வதற்காக உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கியது.  இந்நிலையில், வாடகை பாக்கி செலுத்தாததால், நிலத்தை காலி செய்து கோவில் வசம் ஒப்படைக்க வேண்டுமென கடலூர் வருவாய் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து சங்க உறுப்பினர்களான தாந்தோனி, திருநிலகண்டன் உட்பட 20 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிர்வாகம் தரப்பில், தங்களுக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், உறுப்பினர்கள் வழக்கு தொடர அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.  மேலும் 50 லட்ச ரூபாய் அளவிற்கு குத்தகை பாக்கி நிலுவையில் வைத்துள்ளதாகவும், விவசாயத்திற்கு கொடுத்த நிலத்தை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களுக்கும் கூட்டுறவு சங்கத்திற்கும் தான் ஒப்பந்தம் உள்ளதே தவிர, கோவிலுடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என்பதால் மனுதாரர்களின் கோரிக்கையை  நிராகரித்து, வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

மேலும், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் தொடர்ந்து கோவில் நிலத்தை  வர்த்தகரீதியாகவும் பயன்படுத்தி பெருந்தொகை சம்பாதித்துள்ளதாக கண்டனம் தெரிவித்த  நீதிபதி, சில பேராசை பிடித்தவர்கள் வழக்கு தொடர்ந்து கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  2011ல் வழக்கு தாக்கல் செய்யபட்டு இடைக்கால உத்தரவும் பெற்றிருக்க கூடிய நிலையில், வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட குத்தகை பாக்கியை செலுத்த முன்வரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியை எந்த விதத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், கோவிலுக்கு மனுதாரர்களால் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறி, வருவாய் நீதிமன்றம் 2012ல் பிறப்பித்த உத்தரவை 4 வாரத்தில் நிறைவேற்றி, நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். 

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு அதிகாரி  உதவியுடன் குத்தகை பாக்கியை  வசூலிக்க வேண்டுமென  கோவில் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  திமுக அரசு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்....  சாலையை மறைத்து போராடுவோம்: அண்ணாமலை!!