நீட் தேர்வு; சீட் கிடைத்தும் கல்லூரியில் சேராதவர்களுக்கு தடை!

நீட் தேர்வு; சீட் கிடைத்தும் கல்லூரியில் சேராதவர்களுக்கு தடை!

அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பு இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு தடை விததிக்கப்படும் என தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

2023 - 24ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகி பட்டப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதில், தமிழகத்தில் 762 எம்பிபிஎஸ் இடங்களும், இஎஸ்ஐ கல்லூரிகளில் 23 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 37 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை, கல்லூரி மாற்றம் செய்ய 2 சுற்று வரை இது அனுமதியளிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 3 சுற்றுகள் வரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்த சிலர் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்ததால் கடந்தாண்டு 6 இடங்கள் காலியாகவே இருந்தது. இதனை தவிர்க்க இந்தாண்டு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.

கலந்தாய்வு தொடர்பாக தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு வெயிளிட்டுள்ள அறிக்கையில்,

ஜூலை 20 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் சுற்று கலந்தாய்விற்கு ஜூலை 20  முதல் ஜூலை 25 வரை பதிவு செய்யலாம். ஜூலை 26க்குள் கல்லூரியை தேர்வு செய்யலாம் . அவ்வாறு தேர்வு செய்பவர்கள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

இரண்டாம் சுற்று கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இவர்களி ஆகஸ்ட் 20 முதல் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மூன்றாம் சுற்று கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். நான்காம் சுற்று கலந்தாய்விற்கு செப்டம்பர் 21 முதல் 23ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இச்சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்  கல்லூரியில் சேர வேண்டும்

அவ்வாறு கல்லூரியில் சேராவிட்டால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்படும் எனவும் மேலும்  மருத்துவக் கல்லூரியில் சேரவும் தடைவிதிக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:திருப்பதியில் செம்மர கடத்தல்; தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் கைது!