மருத்துவ கல்வி தரவரிசை பட்டியல்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு!

மருத்துவ கல்வி தரவரிசை பட்டியல்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கான தகுதி வாய்ந்த மாணவ மாணவிகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியல் என மூன்று தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், 2023-2024 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7.5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1768.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7. 5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

20ம் தேதி அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கவுன்சிலிங் தொடங்கினால், தமிழ்நாட்டில் 25ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். இதுவரை மத்திய அரசின் சார்பில் மருத்துவ கலந்தாய்விற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கவில்லை. இணையதளத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை மாறுதலுக்கு உட்பட்டவையாக இருப்பதால் தேதியை உறுதியிட்டு சொல்ல முடியவில்லை என கூறினார். 

7.5% சதவீதம் இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 606 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2021 22 ஆம் ஆண்டு 555 இடங்கள், 20223 ஆம் ஆண்டு 584 இடங்கள் இந்த ஆண்டு 606 இடங்களாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், 7.5% உட்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடைபெறும் எனவும், பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என்றார். மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்ற திட்டம் இல்லை என்றார். 

இதையும் படிக்க:7 நாட்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!