"குடும்பத்தையே காவு வாங்கிய நீட்" இராமதாசு அறிக்கை!

"குடும்பத்தையே காவு வாங்கிய நீட்" இராமதாசு அறிக்கை!

நீட் தேர்வு குடும்பத்தையே காவு வாங்கிவிட்டதாக பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தந்தை மகன் தற்கொலை

சென்னை, குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்த புகைப்படக்காரர் செல்வசேகரின் மகன் ஜெகதீஸ்வரன், கடந்த 2022-ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதிலும், போதுமான மதிப்பெண்களை பெறாததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அதனால், மூன்றாவது முறையாக  நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார். அவருடன் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்த நிலையில், தம்மால் மருத்துவப் படிப்பில் சேர முடியாதோ என்ற கவலையில் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஜெகதீஸ்வரனின் தாயார் இறந்து விட்ட நிலையில் இப்போது நீட் தேர்வினால் மொத்த குடும்பமும் இல்லாமல் போயுள்ளது.

உயிர்க்கொல்லி நோய் 

இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,  நீட் தேர்வு ஓர் உயிர்க்கொல்லி நோய் என்பது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த 2017&ஆம் நீட்  தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு  கொண்டு வரப்படுவதற்கான நோக்கமாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட இரு அம்சங்கள், மருத்துவக் கல்வியின் தரத்தை நீட் அதிகரிக்கும்; மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை நீட் தேர்வு தடுக்கும் என்பன தான். ஆனால், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நீட் தோற்று விட்ட நிலையில், அதை மத்திய அரசு ரத்து செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

20 லட்சம் செலவு

கொண்டு வரப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றாத நீட் தேர்வு, ஊரக, ஏழை மாணவர்களின்  எதிர்காலத்தை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து குறைந்தது நான்கு ஆண்டுகளாவது பயிற்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்காக குறைந்தது ரூ. 20 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாதவர்கள்  மருத்துவம் பயில்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. பொருளாதார வசதி இல்லாமல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள், அதில் வெற்றி பெற முடியாத போது தற்கொலை செய்து கொள்கின்றனர். அதனால் தான் உயிர்க்கொல்லி தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நீட் விலக்கு சட்டம்

நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்பதால் தான், அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது.  அதை ஆளுனரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 19 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 16 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்க வில்லை. நீட் விலக்கு சட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்பதும், அதற்கு தமிழக அரசு விளக்கம் அளிப்பதுமாக சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்படாததால், அதில் மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகமும் நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருவது தான் கல்வியின் கடமை எனக் கூறியுள்ள அவர், அந்த கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இதையும் படிக்க:"நீட் தன்மாய்ப்பு தவிர்க்கப்பட வேண்டும்" கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!