டெல்லியில் சூரைக்காற்றுடன் பரவலாக மழை... வேரோடு சாயும் மரங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

தலைநகர் டெல்லியில் சூரைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 

டெல்லியில் சூரைக்காற்றுடன் பரவலாக மழை... வேரோடு சாயும் மரங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் லேசான மழை பெய்து வருகிறது. 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

குறிப்பாக, டெல்லியில் கண்டோன்மெண்ட், தவுலத் கான் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் இன்று வேலை நாள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் முன்கூட்டியே  வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். எனினும், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இதனிடையே பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் டெல்லியில் தரையிரங்க வேண்டிய 18 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கும், புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படவும் அனுமதி வழங்கப்பட்டன. இதுதவிர 2 விமானங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.