டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிளவா? யோகேந்திர யாதவ் விலகல்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிளவா? யோகேந்திர யாதவ் விலகல்!

விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து யோகேந்திர யாதவ் விலகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி

நவம்பர் 2020 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அதே ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியது. ஒருங்கிணைக்க நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய விவசாய சங்கங்களின் கூட்டணியாகும்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அதன் மீது விரும்பத்தகாத திணிப்பு, அரசியலமைப்பை மீறுவது, விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் பெருவணிகத்திற்கு ஆதரவானது என்று கூறி ஓராண்டுக்கும் மேலான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது.

யோகேந்திர யாதவ்

சமூக செயற்பாட்டாளரும் சுயாட்சி இந்தியா கட்சியின் தலைவருமான யோகேந்திர யாதவ் தாம் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து விலகினாலும், விவசாயிகளின் படையில் ஒரு படைவீரனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். யோகேந்திர யாதவ் டெல்லி அரசியல் வட்டாரங்களில் அறியப்பட்ட ஒரு முதன்மை அரசியல் தலைவர் ஆவார்.

செய்தியாளர் சந்திப்பின் போது யோகேந்திர யாதவின் விலகல் கடிதத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி வெளிப்படுத்தியது. அந்தக் கடிதத்தில் யோகேந்திர யாதவ், கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டத்தைதை முன்னின்று நடத்திய 40 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இனி இருக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

விலகல் கடிதம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பொறுப்பை இனி என்னால் சுமக்க முடியாது. விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசுக்கு எதிராக போராட அனைத்து இயக்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆற்றல்கள் ஒன்றிணைவது முக்கியம்.

எனவே, இதற்காக நான் விவசாயிகள் இயக்கத்தைத் தவிர மற்ற இயக்கங்களுடனும் தொடர்பில் இருக்கிறேன். மற்ற செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளதால் ஒருங்கிணைப்புக் குழுவில் வகிக்கும் பொறுப்பை என்னால் நியாயப்படுத்த முடியாது என்று யோகேந்திர யாதவ் தாம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

சாதாரண உறுப்பினராக தொடர்வேன்

தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு விவசாயிகள் அமைப்பின் தலைமைக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். வாழ்க விவசாயி இயக்கத்தின் உறுப்பினராக இருப்பதால், தாம் எப்போதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஓர் உறுப்பாக் இருப்பதாக என்று அவர் கூறியுள்ளார். வாழ்க விவசாயி இயக்கம் என்பது யோகேந்திர யாதவ் தலைமை வகிக்கும் சுயாட்சி இந்தியா கட்சியின் விவசாய அணியாகும்.

யோகேந்திர யாதவிற்குப் பதிலாக வாழ்க விவசாயி இயக்கத் தலைவர் அவிக் சாஹா இந்தப் பொறுப்பை ஏற்பார் என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில், லக்கிம்பூர் வன்முறையின் போது கொல்லப்பட்ட பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களின் குடும்பங்களைச் சந்தித்த யோகேந்திர யாதவை ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒரு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

பொதுக்குழு கூட்டம்

விவசாயிகள் தலைவர்கள் தர்ஷன் பால், ராகேஷ் டிகாயிட், ஹன்னன் மொல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பேரணிகளை நடத்தவும், நவம்பர் 26 அன்று அந்தந்த மாநில ஆளுநர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி தெரிவித்துள்ளது.