மர்மமான முறையில் உயிரிழந்த 29 வெளிநாட்டுபறவைகள்...விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள்

 ஆந்திர மாநிலம் தடா அருகே வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த 29 வெளிநாட்டுபறவைகள்...விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடா அருகே உள்ள புலிக்காட் ஏரிக்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து இனவிருத்தி செய்து பின்னர் திரும்பி செல்வது வழக்கம். புலிகாட் ஏரிக்கு குளிர்காலத்தில் வரும் பறவைகள் சுற்றுவட்டாரங்களில் உள்ள மற்ற ஏரிகளுக்கும் செல்வது உண்டு.

 இதற்கிடையில் நெல்லூர் மாவட்டம் தடா அருகே உள்ள பாரிஜாதா ஏரி சமீபத்தில் இருபத்தி ஒன்பது வெளிநாட்டு பறவைகள் மர்மமான முறையில் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து கிடந்தன. வெளிநாட்டு பறவைகள் இறந்து கிடப்பது பற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் கால்நடைத்துறையினர், சுற்றுச்சூழல் துறையினர் ஆகியோருடன் அங்கு வந்த வனத்துறையினர் மர்மமான முறையில் இறந்து போன பறவைகளின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் பாரிஜாத ஏரி தண்ணீர் மற்றும் ஏரியில் உள்ள மீன்களையும் பரிசோதனைக்காக விஜயவாடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.