கேரளாவில் 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் பரபரப்பு...!

கேரளாவின் களமசேரியில் உள்ள கிறிஸ்துவ கூட்டரங்கில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொச்சி உருகே உள்ள களமசேரியின் கன்வென்ஷன் சென்டரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததாகத் தெரிகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர்.

இதையும் படிக்க : முத்துராமலிங்க தேவர் ஆலய தேர் பவனி...!

குண்டுவெடிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடும் நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நீண்ட நேரம் போராடி மீட்புப் படையினரால் தீ அணைக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 25 பேர் படுகாயங்களுடன் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், டிஜிபி சம்பவ இடத்தை அடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். தொடர்ந்து விடுமுறைக்குச் சென்ற கொச்சி மருத்துவமனை மருத்துவர்கள் பணிக்குத் திரும்புமாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டியளித்துள்ளார்.