யாஸ் புயல் காரணமாக 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...

யாஸ் புயல் காரணமாக 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் காரணமாக 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒடிசாவிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   யாஸ் என பெயரிடப்பட்டு  இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இந்த புயலால் மணிக்கு 165  முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை யடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய மாநிலங்கள் எடுத்து வருகின்றன.

யாஸ் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை வரும் 29-ந்தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் யாஸ் புயலின் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியாக அமைந்துள்ள அந்த 14 மாவட்டங்களில் இருந்து இதுவரை 8 லட்சத்து 9 ஆயிரத்து 830 பேர் பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே யாஸ் புயல் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் படையின் தலைவர் எஸ்.என்.பரதன் தெரிவித்துள்ளார்.யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர  முதலமைச்சர்களிடம் காணொலி மூலம்  ஆலோசனை நடத்தினார்.