இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது ஆலோசனைக் கூட்டம்...!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வந்ததால் காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்நிலையில் அக்டோபர் 13-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 88-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திலும், அக்டோபர் 31-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா , புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலத்தின் அதிகாரிகளுக்கு காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.