காரைக்காலில் காலரா நோய் தாக்கம் அதிகரிப்பு.. பொது சுகாதார அவசர நிலையை அடுத்து 144 தடை உத்தரவு!!

காரைக்காலில் காலரா நோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் காலரா நோய் தாக்கம் அதிகரிப்பு.. பொது சுகாதார அவசர நிலையை அடுத்து 144 தடை உத்தரவு!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவது தொடர் கதையாகி வருகிறது.

வாந்தி, பேதி, மயக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலையை புதுச்சேரி அரசு பிறப்பித்தது.

இதன் தொடர்ச்சியாக, காரைக்காலில் தற்போது 144 தடை உத்தரவை ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து உணவங்கள், கல்வி நிலையங்கள், திருமணக் கூடங்கள், மருத்துவமனைகளில் கட்டாயம் காய்ச்சிய குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொதிக்க வைத்த குடிநீரை மட்டுமே மக்கள் பருக வேண்டும், அனைத்து வீடுகளிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, காலரா நோய் பரவல் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என காரைக்கால் அரசு மருத்துவமனை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு மருத்துவமனையில் வயிற்றுபோக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் நலமுடன் வீடு திரும்பியதாகவும், மற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.