வங்கக்கடலில் உருவான மற்றொரு புயல்...!

தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

கடந்த 19-ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.

தொடா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற இந்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 'தேஜ்' புயலாக உருவானது. இந்நிலையில், அந்த புயலானது அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. மேலும் இந்த புயலானது வரும் 25-ம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வங்கக்கடலில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வரும் 24-ம் தேதிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், காற்று வீசும் வேகத்தை பொறுத்து, புயல் உருவாகுமா? என்பது தெரியவரும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் சின்னம், மேற்கு வங்கம் அல்லது வங்கதேச கடற்பகுதியை நோக்கி செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரவில் சென்னையில் முகலிவாக்கம், போரூா், கிண்டி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.