அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி; தொழிலாளர்கள் கைது!

அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி; தொழிலாளர்கள் கைது!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தொழிலாளர் துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஜீவா ஒப்பந்த சங்க தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்படும், வரை மாத ஊதியமாக 50,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 26-ஆம் தேதி முதல் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போராட்டத்தில் 11-வது நாளாக நேற்று, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வீட்டை நோக்கி, பேரணியாகச் செல்லத் திட்டமிட்டு, என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், மாலை 5 மணி அளவில் விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் ஒன்று கூடினர்.
பின்னர் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்,  அமைச்சரை காணவில்லை எனகூறி, முழக்கமிட்டவாறு அமைச்சர் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றபோது, காவல்துறையினர் பாலக்கரையில் தடுத்து நிறுத்தியதால், நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக, பாலக்கரை ரவுண்டானாவில் தொழிலாளர்களின் நலனைக் காக்காத அமைச்சரைக் கண்டித்தும், தொழிலாளர்கள் மீது அக்கறை கொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜீவா ஒப்பந்த சங்க சிறப்பு செயலாளர் பேசுகையில், என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பதற்கு முன்னரே, கடந்த மாதம், மற்றும் கடந்த வருடம் என இரண்டு முறை,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை சந்தித்து தங்களது, ஆறு அம்ச கோரிக்கைகளை பற்றி, கூறிய போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு குழு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆனால் வாக்குறுதி கொடுத்த அமைச்சர் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போனதால்தான், தற்போது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து, தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

என் எல் சியில் போராடக் கூடிய தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை கூறுகிறது, என் எல் சி நிர்வாகம் அறிவுரை கூறுகிறது, ஆனால் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் இருக்கும் சொந்தமாவட்டத்திலேயே, தொழிலாளர்களை சந்திக்காமல் இருப்பது ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது என கூறினார்.

தொழிலாளர்களின் பிரச்சினை, தொழிலாளர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தொழிலாளர்துறை அமைச்சரால், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் தொழிலாளர்துறை அமைச்சரை அனுப்பி தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.

ஆனால் அமைச்சர் பேசுவதற்கே தயங்குவதாகவும், உடனடியாக மத்திய அரசு மற்றும் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி சுமுக தீர்வு எட்டாதவரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் காவல்துறையினர் கைது செய்து பேருந்து மூலமாக விருதாச்சலத்தில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைத்தனர்.

இதையும் படிக்க:” நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்-3 ” - இஸ்ரோ அறிவிப்பு..!