மேகதாது அணை கட்டும் முடிவில் பின்வாங்கமாட்டேன்... பொம்மை அடாவடி!!

மேகதாது அணை கட்டும் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை, அதிலிருந்து பின்வாங்கும் முடிவும் இல்லை என்று கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டும் முடிவில் பின்வாங்கமாட்டேன்... பொம்மை அடாவடி!!
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டிவருவதுபோன்று, தமிழ்நாடு அரசும் அதை எதிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதுதொடர்பாக மத்திய அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
 
இருப்பினும், அணைகட்டும் விவகாரத்தை கர்நாடக அரசு கைவிடுவது மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ததையடுத்து, நேற்று (ஜூலை 28) புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
 
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியில் கூடுதலாக உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதற்கே அணை கட்டப்படுகிறது. அது எங்கள் உரிமை. மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக நாங்கள் சரியான பக்கத்தில்தான் இருக்கிறோம் என்றும் மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.