”பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை" மல்லிகார்ஜூன கார்கே பேச்சு!

”பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை" மல்லிகார்ஜூன கார்கே பேச்சு!

பெங்களூருவில் எதிர்கட்சிகளின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் பெங்களூருவில் 2ம் நாளாக எதிர்கட்சிகள் கூட்டம் தொடங்கியது. இரண்டாம் நாளாக கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோரை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வரவேற்றார்.

தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா, ஜார்கண்ட், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், பீகார் என 7 மாநில முதலமைச்சர்களுடன், சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, என்.சி.பி தலைவர் சரத்பவார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், விசிகவின் தொல்திருமாவளவன், மதிமுகவின் வைகோ உள்ளிட்ட 26 கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : அமைச்சர் பொன்முடியுடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர்...!

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்லிகார்ஜூன கார்கே, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஏற்கனவே தெரிவித்திருந்தது போல், ஆட்சியை பிடிக்கவோ பிரதமர் பதவியை அடையவோ காங்கிரசுக்கு ஆசையில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் உரிமைகள் நசுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்கட்சிக் கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது தொடர்பான விவாதம், எதிர்கட்சிக் கூட்டணியின் பெயர், கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாநில அளவில் இங்குள்ள பல்வேறு கட்சிகளிடையே பல்வேறு வேறுபாடுகள் இருப்பினும், பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றிணைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.