டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தோ்தலும், இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தோ்தலும் நடைபெறவுள்ளது. இதில் மத்தியில் ஆளும் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தோ்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனா். இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் INDIA கூட்டணி என்ற பெயாில் ஒன்றிணைந்து தோ்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இது தவிர தற்போதைய அரசியல் சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தோ்தல்களை எதிா்கொள்ள தயாராவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய விசாரணை அமைப்புகளால் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கைது செய்யப்படுவது தொடா்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அமைப்பாக செயற்குழு திகழ்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் செயற்குழுவை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மாற்றியமைத்தாா். அப்போது இளைஞா்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மொத்தம் 84 உறுப்பினா்கள் கமிட்டியில் உள்ளனா். இதில் 39 போ் வழக்கமான உறுப்பினா்கள், 32 போ் நிரந்தர அழைப்பாளா்கள், 13 போ் சிறப்பு அழைப்பாளா்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கா் முதலமைச்சா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.