வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்...

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் திட்டம்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல மாதங்களாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடாரம் அமைத்து தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காக மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், தற்போது இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நாளை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில், பயணிகள் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் மூலம் நகருக்குள் நுழைந்து போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து சிறப்பு குற்றப்பிரிவு காவல் ஆணையர் சதீஷ் கோல்சா மற்றும் கூடுதல் காவல் ஆணையர் ஜாஸ்பெல் சிங் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து விளக்கமளித்த டெல்லி காவல்துறை, விவசாயிகள் நாடாளுமன்றம் அருகே கூடுவது குறித்து எந்தவொரு எழுத்துப்பூர்வமான அனுமதியும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.