டெல்லி : அபாயக்குறியை தாண்டிய யமுனை நீர்...கரைபுரண்டு ஓடும் வெள்ளம்...!

டெல்லி : அபாயக்குறியை தாண்டிய யமுனை நீர்...கரைபுரண்டு ஓடும் வெள்ளம்...!

யமுனை நதியின் வெள்ளப் பெருக்கு அபாய அளவைத் தாண்டியுள்ள நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழை காரணமாக, யமுனை நதியில் படிப்படியாக அதிகரித்த வெள்ளம், நேற்று இரவு அபாய அளவைத் தாண்டியது. இதன் மூலம் 208. 05 என்ற அளவுக்கும் அதிகமாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக, லோகா புல், வாஜிராபாத், புரானா க்யூலா போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளான காஷ்மீரி கேட், ஜி.டி. கர்னல் சாலை, நிகாம் போத் கட் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : உச்சத்தை தொட்ட தக்காளி விலை : அடுத்தக்கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை!

அதுமட்டுமல்லாமல், முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சாஸ்திரி பூங்கா, சரை கலே கான் பகுதி ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.  அதேசமயம், வெள்ளப் பெருக்கு காரணமாக யமுனா நதிக் கரை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

இதனிடையே, வாஜிராபாத் , சந்திராவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படுவதாக அறிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாஜிராபாத் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டார்.