திருப்பதி கோவிலில் இன்று முதல் 8 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்- தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவிலில் இன்று முதல் நாள்தோறும் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருப்பதி கோவிலில் இன்று முதல் 8 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்- தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி பெருமாள் தான் உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுள் என்ற பெருமை பெற்றவர். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர்.

இத்தகைய பிரசித்தப்பெற்ற இக்கோவிலில் சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக , மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. மேலும் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது, அத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 300 ரூபாய் கட்டணத்தில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் 2 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது நாள்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசன் கட்டிட வளாகத்தில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் ஆன்லைன் மூலம் இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.