"கடத்தப்பட்டவர்கள் திரும்பும் வரை காசாவுக்கு நீர் இல்லை" - இஸ்ரேல் எரிசக்தித்துறை அமைச்சர் எச்சரிக்கை

பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள் வழங்க முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே கடந்த 6 நாட்களாக சண்டை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக,காசாவின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கு மட்டும் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க : ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை...!

போர் நிலையைத் தாண்டி உணவு, மின்சாரத்தை இஸ்ரேல் நிறுத்தியதால் காசா மக்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்களின் உடல்கள் என கொத்துக் கொத்தாக மீட்கப்படும் நிலையில், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்ல வழியின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படும் வரை, அப்பகுதிக்கு தண்ணீர், மின்சாரம், எரிபொருள் வழங்க முடியாது என இஸ்ரேல் எரிசக்தித்துறை அமைச்சர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிரான வன்முறையை முதலில் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஈரான் மற்றும் சவுதி அரேபியா கூட்டாக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.