புயல் எச்சரிக்கை: சென்னை துறைமுகத்தில் 2-ஆம் எண் கூண்டு ஏற்றம்!

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான தேஜ், மிக தீவிர புயலாக வலுவடைந்தது. இதேபோல் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது மேலும் நகர்ந்து  தென்மேற்கு அரபிக் கடலில் புயலாக மாறியதையடுத்து  இந்த புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டது. 

தேஜ் புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயல் இன்று மேலும் வலுவடையும் என்றும் தெரிவித்துள்ளது.

வரும் 25 ஆம் தேதி அதிகாலை ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கிடையே கரையைக் கடக்கும் என்றும் இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகங்களில்  புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.